2023-ல் இந்தியாவில் வெளியான சிறந்த ஹைபிரிட் கார்கள்
2023ம் ஆண்டில் பல்வேறு புதிய எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட ஹைபிரிட் கார்களின் வரவும் சற்று அதிகமாகவே இருந்தது. இந்தாண்டு வெளியான ஹைபிரிட் கார்களுள் சிறப்பான ஐந்து கார்கள் இங்கே. இந்தியாவில் கார் பிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றி சிட்டி மாடலின் ஹைபிரிட் வடிவத்தை ரூ.18.89 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தாண்டு வெளியிட்டிருந்தது ஹோண்டா. 125hp பவர் மற்றும் 253Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.5-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்தக் கார். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாக இன்விக்டோ மாடலை ரூ.24.82 லட்சம் விலையில் வெளியிட்டிருந்தது மாருதி சுஸூகி. 184hp பவர் மற்றும் 209Nm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்த மாடல்.
சிறந்த ஹைபிரிட் கார்கள்:
TNGA-K பிளாட்ஃபார்மின் மீது கட்டமைக்கப்பட்ட ஹைபிரிட் இன்ஜின் கொண்ட புதிய வெல்ஃபையர் சொகுசு எம்பிவியை, ரூ.1.2 கோடி விலையில் இந்தியாவில் வெளியிட்டிருந்தது டொயோட்டா. இந்த எம்பிவியில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரூ.3.3 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு, V8 பிளக்-இன் ஹைபிரிட் இன்ஜின் கொண்ட AMG GT 63 S E ஃபெர்ஃபாமன்ஸ் மாடல் ஹைபிரிட் காரை இந்தியாவில் வெளியிட்டது மெர்சிடீஸ். இந்தியாவில் அதிக திறன் கொண்ட மற்றும் விலையுயர்ந்த ஹைபிரிட் காராக, ரூ.8.9 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது லம்போர்கினி ரிவோல்டோ. மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட, 6.5 லிட்டர் V12 இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்தக் கார்.