லிட்டருக்கு 28 கிமீ வரை மைலேஜ் தரும் டாப் 5 கார்கள்! ஒரு முழுமையான பார்வை
செய்தி முன்னோட்டம்
உலக அரசியலில் நிலவும் ஈரான்-அமெரிக்கா இடையிலான போர், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்படும் விளைவை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடைபவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலால் வரியை லிட்டருக்கு ₹10 வரை குறைத்து ஆறுதல் அளித்தாலும், போர்ச் சூழல் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஒரு சராசரி வாகன ஓட்டியின் மிகப்பெரிய ஆயுதம் மைலேஜ் மட்டுமே. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள, லிட்டருக்கு 25 கிமீக்கும் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மாருதி
மாருதி சுஸூகி விக்டோரிஸ்
இந்தியாவின் மைலேஜ் சாம்பியன் என்ற அரியணையை மாருதியின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியான விக்டோரிஸ் அலங்கரிக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பெட்ரோல்-ஹைப்ரிட் தொழில்நுட்பம், ஒரு எஸ்யூவி ரக காராக இருந்தும் லிட்டருக்கு 28.65 கிமீ என்ற மலைக்க வைக்கும் மைலேஜைத் தருகிறது. கிராண்ட் விட்டாரா போன்ற மற்ற மாடல்களை விடவும் இதன் வடிவமைப்பு மற்றும் எடை மேலாண்மை இதற்கு கூடுதல் மைலேஜ் பெற உதவுகிறது.
டொயோட்டா
டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர்
மைலேஜ் வேட்டையில் இரண்டாம் இடத்தை டொயோட்டா ஹைரைடர் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் உள்ள 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கூட்டணி, லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜை உறுதி செய்கிறது. குறிப்பாக நகர்ப்புற நெரிசல்களில் இது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குவதால், பெட்ரோல் செலவு பாதியாகக் குறைகிறது.
ஹோண்டா
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்
ஆடம்பரமான செடான் கார்களும் சிக்கனமானவைதான் என்பதை நிரூபித்துள்ளது ஹோண்டா சிட்டி ஹைப்ரிட். இதன் நவீன ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஒரு லிட்டருக்கு 27.26 கிமீ மைலேஜ் தருவதாக ARAI சான்றளித்துள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயல்படுவதால், இது செயல்திறனிலும் சமரசம் செய்து கொள்வதில்லை.
மாருதி
மாருதி சுஸூகி செலிரியோ
ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத சாதாரண பெட்ரோல் கார்களில் இன்னமும் அசைக்க முடியாத மைலேஜ் ராணியாகத் திகழ்வது செலிரியோதான். இதன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் என்ஜின், ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைந்து லிட்டருக்கு 26.00 கிமீ மைலேஜைத் தருகிறது. நடுத்தர வர்க்க குடும்பங்களுக்குப் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட கார் இதுவாகும்.
மாருதி
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்
பலரது ஃபேவரைட் காரான ஸ்விஃப்ட், தனது புதிய 'Z சீரிஸ்' என்ஜின் மூலம் மைலேஜிலும் சாதனை படைத்துள்ளது. இதன் ஏஎம்டி வேரியண்ட் 25.75 கிமீ மைலேஜையும், மேனுவல் வேரியண்ட் 24.8 கிமீ மைலேஜையும் வழங்குகின்றன. இதே என்ஜினைப் பயன்படுத்தும் புதிய மாருதி டிசையர் காரும் லிட்டருக்கு 25.71 கிமீ மைலேஜ் தந்து டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கிறது.
டிப்ஸ்
நிபுணர் டிப்ஸ்
பெட்ரோல் விலை நிலவரம் உலகளாவிய காரணிகளால் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாவதால், புதிய கார் வாங்குபவர்கள் மைலேஜிற்கு முன்னுரிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல், டயர்களில் சரியான காற்றழுத்தத்தைப் பராமரிப்பது மற்றும் தேவையற்ற எடையைக் குறைப்பதன் மூலமும் மைலேஜை மேலும் அதிகரிக்க முடியும்.