'இந்தியா பைக் வீக் 2023' நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் டாப் பைக்குகள்
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக, இன்றும் நாளையம் (டிசம்பர் 8 மற்றும் 9), கோவாவில் நடைபெறவிருக்கிறது இந்தியா பைக் வீக் (India Bike Week) நிகழ்வு. இந்நிகழ்வுக்கான ஒருநாள் கட்டணமாக ரூ.2,499-ம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.2,999-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த இந்தியா பைக் வீக்கில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் பைக்குகள் குறித்த விபரங்கள் இங்கே. உலகளவில் பைக்கர்களிடையே மிகவும் பிரபலமான புதிய எலிமினேட்டர் 450 பைக் மாடலை இந்த பைக் வீக்கில் வெளியிடவிருக்கிறது கவாஸாகி. 45hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 451சிசி பேரலல் ட்வின் இன்ஜினைப் பெற்றிருக்கிறது இந்த எலிமினேட்டர். 48hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 457சிசி பேரலல் ட்வின் இன்ஜினைக் கொண்ட தங்களுடைய RS 457 பைக் மாடலை இந்த பைக் வீக்கில் காட்சிப்படுத்தவிருக்கிறது ஏப்ரிலியா.
இந்தியா பைக் வீக்கில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் பைக்குகள்:
கடந்த ஜூன் மாதம் தங்களுடைய புதிய X440 ப்ரீமியம் பைக்கை இந்தியாவில் வெளியிட்டது ஹார்லி டேவிட்சன். அந்த மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்கிராம்பளர் மாடல் ஒன்றை இந்த பைக் வீக்கில் காட்சிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹார்லி டேவிட்சன். எலிமினேட்டர் 450 மாடல் மட்டுமல்லாது, புதிய W175 ரெட்ரோ ரோட்ஸ்டர் பைக் மாடலையும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தவிருக்கிறது கவாஸாகி. 13hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 177சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருக்கிறது W175. மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வைத் தொடர்ந்து இந்தியா பைக் வீக்கிலும் காட்சிப்படுத்தப்படவிருக்கிறது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பைக் மாடல். 39hp பவரை வெளிப்படுத்தக்கூடிய புதிய 452சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது புதிய ஹிமாலயன்.