2026-க்குள் டோல் பிளாசாக்கள் நீக்கம்: நிதின் கட்கரியின் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் நெடுஞ்சாலை பயணங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், வரும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். வாகனங்கள் நிற்காமல் பயணிக்க ஏதுவாக, தற்போதைய முறையை மாற்றி GPS அடிப்படையிலான நவீன சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய நடைமுறை குறித்து விளக்கிய அமைச்சர் கட்கரி, இனி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் ஃபாஸ்டேக் விவரங்களைக் கேமராக்கள் மூலம் தானாகவே கண்டறிந்து, பயணிக்கும் தொலைவிற்கு ஏற்ப மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சுங்கக் கட்டணம்
சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தத் திட்டம் ஏற்கனவே 85 இடங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. புதிய முறையினால் பயண நேரம் மிச்சமாவதுடன், கட்டணமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, தற்போது ஒரு சுங்கச்சாவடியில் 125-150 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள், புதிய முறையில் அந்தத் குறிப்பிட்ட தூரத்திற்கு சுமார் 15 ரூபாய் மட்டுமே செலுத்தும் நிலை உருவாகலாம். மேலும், 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்க 3,000 ரூபாய்க்கு சிறப்பு பாஸ் வழங்கும் திட்டமும் ஆலோசனையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2026-ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றமானது, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.