வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கார், பைக் என் நம்முடைய வாகனம் எதுவாக இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறை வாகனத்தின் காப்பீட்டுக் திட்டத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். ஒரு வாகனத்தை வாங்கும் போது எந்த காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறதோ, இறுதி வரை அந்த நிறுவனத்திலேயே தான் தொடர வேண்டும் என நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்போம். அப்படியில்லை, ஒவ்வொரு வருடமும் காப்பீட்டைப் புதுப்பிக்கும் போது நாம் விரும்பும் நிறுவனத்தின் நம் வாகனக் காப்பீட்டைத் தொடர்ந்து கொள்ள முடியும். காப்பீட்டுத் திட்டத்தை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் No Claim Bonus-ஆனது நமக்குக் கிடைக்காது எனவும் சிலர் நினைத்துக் கொண்டிருப்போம். புதிய நிறுவனத்தில் காப்பீடு செய்தாலும், முந்தைய வருடத்திற்கான No Claim Bonus-ஐ அந்நிறுவனம் நமக்கு அளிக்கும்.
வாகனக் காப்பீடு: தவிர்க்க வேண்டியை
புதிய நிறுவனத்திற்கு காப்பீட்டுத் திட்டத்தை மாற்றும் போது நம்முடைய வாகனம், அந்நிறுவனத்தால் கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. முந்தைய காப்பீட்டுத் திட்டம் காலாவதி அடைந்திருந்தாலோ அல்லது ஒரு வாகனத்தின் உரிமையளர் மாறியிருந்தால் மட்டுமே சோதனை செய்யப்பட வேண்டியிருக்கும். எந்த நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டமாக இருந்தாலும், புதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் IDV மதிப்பை சரிபார்க்கவும். இந்த IDV மதிப்பின் அடிப்படையில் தான் புதிய திட்டத்திற்கான ப்ரீமியம் தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு காப்பீட்டுத் திட்டத்தின் காலத்திற்கு இடையில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு மாறுவதைத் தவிர்க்கவும். இது நமக்குக் கிடைக்க வேண்டிய பெரும்பாலான பலன்களைக் குறைத்துவிடும். குறைந்த விலையை மட்டும் மனதில் வைத்து, புதிய திட்டத்தை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.