புதிய கார் அறிமுகங்கள் இந்த ஆண்டு இல்லை எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா.. ஏன்?
இந்த 2023-ல் புதிய கார் மாடல்கள் எதையும் வெளியிடும் திட்டத்தில் மஹிந்திரா இல்லை எனத் தகவல் வெளியாகியிருந்தது. இதனை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்திருக்கிறார். இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்டான மஹிந்திரா நிறுவனம், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் கார்களின் தயாரிப்பில் சில பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதோடு, ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட கார்கள் தயாரிப்புக்கு நிலுவையில் இருக்கின்றன. மேலும், மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களான பொலிரோ நியோ மற்றும் XUV400 ஆகிய மாடல்கள் தயாரிப்புக்கு தயாரான நிலையில் இருக்கின்றன. இந்த சூழ்நிலைகளை அடுத்த இந்த வருடம் புதிய வெளியீட்டுத் திட்டங்கள் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா.
நிலுவையில் இருக்கும் டெலிவரிக்கள்:
மஹிந்திராவின் ஃப்ளாக்ஷிப் மாடல்களுள் ஒன்றான் மஹிந்திரா தாருக்கு 58,000 டெலிவரிக்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்த மாடலானது ரூ.10.54 லட்சம் முதல் ரூ.16.78 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல், ஸ்கார்பியோ-N மாடலுக்கு 78,000 டெலிவரிக்களும், அதன் ஃப்ளாக்ஷிப் மாடலான XUV700 மாடலுக்கு 1,17,000 டெலிவரிக்களும் நிலுவையில் இருக்கின்றன. இதில் ஸ்கார்பியோ-N மாடலானது ரூ.13.05 லட்சம் முதல் ரூ.24.52 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலும், XUV700 மாடலானது ரூ.14.01 லட்சம் முதல் ரூ.26.18 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மொத்தமாக 2.5 லட்சம் கார் டெலிவரிக்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது மஹிந்திரா.