டெஸ்லா மாடல் Y காரின் விலை ரூ.9 லட்சம் வரை குறைப்பு: இந்தியாவில் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்தது டெஸ்லா நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மின்சார வாகன விற்பனையை முறைப்படுத்தவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் டெஸ்லா நிறுவனம் தனது மாடல் Y காரின் ஆரம்ப விலையை ரூ.9 லட்சம் வரை அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன்படி, ரூ.50.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 'மாடல் Y பிரீமியம் ரியர்-வீல் டிரைவ்' (Premium RWD) என்ற புதிய வேரியண்ட்டை அந்நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இதனுடன், கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் களமிறக்கப்பட்ட இரண்டு பழைய மாடல்களின் விற்பனையைத் டெஸ்லா நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக முழுமையாக நிறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதிய பிரீமியம் RWD மற்றும் கடந்த மாதம் அறிமுகமான எல் பிரீமியம் AWD (6-சீட்டர்) ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
சந்தைப் போட்டி நிலவரம்
இறக்குமதி வரி விதிப்பையும் தாண்டி பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் சொகுசு கார்களுக்குப் போட்டி
டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து 70 சதவீத அடிப்படை சுங்க வரியுடன் இந்த கார்கள் இந்தியாவுக்கு முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டாலும், இதன் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ iX1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் CLA BEV போன்ற போட்டி சொகுசு கார்களின் விலையை விட இது மலிவாகக் கிடைக்கிறது. கடந்த 2025 ஜூலையில் இந்தியாவில் முதல் ஷோரூமைத் தொடங்கிய டெஸ்லா, கடந்த நிதியாண்டில் 342 கார்களையும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 43 கார்களையும் மட்டுமே விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மிதமான விற்பனை வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவே, தற்பொழுது இத்தகைய மிக ஆக்ரோஷமான விலை குறைப்பு மற்றும் சந்தை மாற்ற உத்திகளை டெஸ்லா கையாண்டுள்ளது.
காரின் சிறப்பம்சங்கள்
அதிநவீன உட்புற வசதிகள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தரங்களுடன் ஜூலையில் டெலிவரி
இந்த புதிய மாடல் Y காரில் ஆல்-பிளாக் கேபின் தீம், பெரிய 16-இன்ச் தொடுதிரை மற்றும் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் அதிநவீன பேட்டரி வசதிகள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய முன்னணி பாதுகாப்பு முகமைகளிடம் மிக உயர்ந்த பாதுகாப்பு ரேட்டிங்குகளைப் பெற்றுள்ள இந்த புதிய கார்களின் டெலிவரி வரும் ஜூலை 2026 முதல் தொடங்கவுள்ளது. மேலும், நுகர்வோர் எளிதாக வாங்கும் பொருட்டு ரூ.6 லட்சம் முன்பணத்துடன், மாதத் தவணையாக ரூ.39,990 முதல் தொடங்கும் சிறப்பு நிதியுதவித் திட்டங்களையும் டெஸ்லா அறிவித்துள்ளது.