இந்தியாவில் டெஸ்லா அறிமுகம்? பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரும் எலான் மஸ்க்கின் குழு!
கடந்த சில ஆண்டுகளாவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க். முன்னர் இது குறித்து சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பின்னர் அத்திட்டத்தைக் கைவிட்டார் அவர். மேலும், பிற நாடுகளை விட இந்தியாவில் இறக்குமதி வரிகள் அதிகம் எனவும் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார் அவர். தற்போது மீண்டும் டெஸ்லா கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர அவர் விரும்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக டெஸ்லாவின் முக்கிய அதிகாரிகள் நாளை இந்தியா வரவிருக்கிறார்கள். இந்தியாவில் டெஸ்லா வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவிருக்கும் அவர்கள், டெஸ்லா கார்களுக்கான பாகங்களுக்கு இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவிருப்பதாகவும் தெரிகிறது.
இந்தியாவில் டெஸ்லா கார்கள்?
இந்தியாவில் முன்னரே தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு அதனை இந்திய சாலைகளில் சோதனை செய்து வந்தது டெஸ்லா. நாளை நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் தங்களுடைய டெஸ்லா மாடல் - 3 காரை இந்தியாவில் ரூ.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்நிறுவனம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஸ்டாண்டர்டு பிளஸ், லாங் ரேஞ்சு மற்றும் பெர்ஃபாமன்ஸ் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது மாடல்-3 கார். லாங் ரேஞ்சு மற்றும் பெர்ஃபாமன்ஸ் மாடல்களில் ஆல்-வீல் டிரைவுடன் இரண்டு மோட்டார்கள் வழங்கப்பட்டிருக்கும். மேலும், 500 கிமீ மேல் ரேஞ்சைக் கொண்டிருக்கும். தொடக்கநிலை மாடலான ஸ்டாண்டர்டு பிளஸ் வேரியன்ட்டானது 425 கிமீ ரேஞ்சுடன் ரியர் வீல் டிரைவைக் கொண்டதாக இருக்கும்.