ஜூன் 30 அன்று அறிமுகமாகிறது டாடா சியரா EV! 500 கிமீ ரேஞ்ச் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகனப் பிரிவை மேலும் வலுப்படுத்தத் தயாராகிவருகிறது. 90களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருந்த டாடாவின் சியரா பிராண்ட், தற்பொழுது முற்றிலும் புதிய எலக்ட்ரிக் வடிவில் களம் காணவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சியரா எலக்ட்ரிக் காரை வரும் ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. டாடாவின் எலக்ட்ரிக் கார் வரிசையில் இது ஏழாவது மாடலாகும். இந்த கார் கர்வ் மற்றும் ஹாரியர் ஆகியவற்றின் எலக்ட்ரிக் மாடல்களுக்கு இடையில் வகைப்படுத்தப்படவுள்ளது.
தொழில்நுட்பம்
500 கிமீ ரேஞ்ச் மற்றும் ஏடபிள்யூடி தொழில்நுட்பம்
புதிய டாடா சியரா எலக்ட்ரிக் எஸ்யூவி கார் நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் காரின் வேரியண்ட்டைப் பொறுத்து 65kWh முதல் 75kWh வரையிலான திறன் கொண்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரி வேரியண்ட்டுகள் ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால், 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் வழக்கமான ரியர்-வீல் டிரைவ் (RWD) மட்டுமன்றி, மேம்பட்ட செயல்திறனை வழங்க ஏதுவாக ஆல்-வீல் டிரைவ் எனப்படும் இரு மோட்டார்கள் கொண்ட தொழில்நுட்பமும் உயர் ரக மாடல்களில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனுடன் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் விஹிக்கிள்-டு-லோட் வசதிகளும் இதில் சேர்க்கப்படவுள்ளன.
வடிவமைப்பு
பாரம்பரிய ஸ்டைலுடன் கூடிய நவீன எலக்ட்ரிக் வாகன வடிவமைப்பு
டாடா சியரா எலக்ட்ரிக் காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, அதன் பழைய பாரம்பரிய தோற்றத்தை நினைவுபடுத்தும் வகையில் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் காருக்கே உரித்தான மூடப்பட்ட முன்பக்க கிரில், காரின் முழு அகலத்திற்கும் ஒளிரும் எல்இடி விளக்குகள், காரின் பக்கவாட்டோடு இணையும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஏரோடைனமிக் திறனை அதிகரிக்கும் அலாய் வீல்கள் ஆகியவை இதன் வெளிப்புறத் தோற்றத்திற்குப் பிரீமியம் தன்மையைத் தருகின்றன. காரின் வெளிப்புறத்தில் டாடாவின் பிரத்யேக .ev முத்திரை இடம்பெறவுள்ளது.
கேபின்
மூன்று திரைகளுடன் கூடிய நவீன உட்புற கேபின்
சியரா எலக்ட்ரிக் காரின் உட்புற கேபின் சொகுசு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக வேரியண்ட்டுகளில் ட்ரிபிள்-ஸ்கிரீன் வசதி கொடுக்கப்படவுள்ளது. அதாவது, ஓட்டுநருக்கான டிஜிட்டல் கிளஸ்டர், நடுவில் உள்ள பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை தவிர, முன் சீட்டில் அமரும் பயணிக்கு எனப் பிரத்யேகமாக மற்றொரு திரை வழங்கப்படவுள்ளது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான வென்டிலேட்டட் சீட்டுகள், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் லெவல் 2 ஏடிஏஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் நிறைந்துள்ளன.
விலை நிலவரம்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சந்தைப் போட்டி நிலவரம்
டாடா சியரா எலக்ட்ரிக் காரானது இந்தியச் சந்தையில் ₹18 லட்சம் முதல் ₹25 லட்சம் வரையிலான நடுத்தர விலைக் குறியீட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என ஆட்டோமொபைல் துறையினர் கணிக்கின்றனர். மேலும், காரின் ஆரம்ப விலையைக் குறைப்பதற்காக டாடா நிறுவனம் தனது பேட்டரி ஆஸ் ஏ சர்வீஸ் (BaaS) திட்டத்தையும் இந்த காருக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஜூன் 30 அன்று சந்தைக்கு வரும் இந்த சியரா எலக்ட்ரிக் கார், நடுத்தர எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் தற்பொழுது களம் கண்டுவரும் மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், எம்ஜி வின்ட்சர் மற்றும் மாருதியின் வரவிருக்கும் இ-விட்டாரா ஆகிய கார்களுக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.