பன்ச் CNG மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா
இந்தியாவில் தங்களுடைய CNG லைன்-அப்பில் டியாகோ, டிகோர் மற்றும் ஆல்ட்ராஸூக்கு அடுத்தபடியாக, நான்காவது கார் மாடலாக பன்ச் CNG மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா. பெட்ரோல் மாடல் பன்ச்சின் டிசைனில் எந்த மாற்றமும் செய்யாமல், CNG வசதியை மட்டும் கூடுதலாகச் சேர்த்து புதிய பன்ச் CNG மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா நிறுவனம். ப்யூர், அட்வென்சர் மற்றும் அக்காம்ப்ளிஷ்டு என மூன்று வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது பன்ச் CNG. இதில் அட்வென்சர் வேரியன்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு அட்வென்சர் ரிதம் என்ற துணை வேரியன்ட் ஒன்றையும், அக்கம்ப்ளிஷ்டு வேரியன்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு அக்கம்ப்ளிஷ்டு டேசில் SS என்ற துணை வேரியன்டும் கொண்டிருக்கிறது பன்ச் CNG லைன்அப்.
டாடா பன்ச் CNG: இன்ஜின் மற்றும் விலை
பன்ச் பெட்ரோல் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே மூன்று சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் இன்ஜினே பன்ச் CNG-யிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது பெட்ரோல் மோடில் 86hp பவரும், 113Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. CNG மோடில், 73.4hp பவரையும், 103Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. பூட் ஸ்பேஸை சற்று கூடுதலாகக் கொடுப்பதற்காக, ஆல்ட்ராஸ் CNG மாடலில் பயன்படுத்தப்பட்ட ட்வின் சிலிண்டர் செட்டப்பையே பன்ச் CNG-யிலும் கொடுத்திருக்கிறது டாடா. பெட்ரோல் CNG-யை விட சராசரியாக ரூ.1 லட்சம் கூடுதலான விலையில் வெளியாகியிருக்கிறது பன்ச் CNG மாடல். இந்தியாவில் ரூ.7.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து, ரூ.8.65 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரையிலான விலையில் பன்ச் CNG-யை வெளியிட்டிருக்கிறது டாடா.