டிசம்பர் 15ல் தங்களுடைய புதிய 'சிம்பிள் டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் சிம்பிள் எனர்ஜி
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடவிருக்கிறது. ஓலாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராந ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்குப் போட்டியாக, சிம்பிள் டாட் ஒன் (Simple Dot One) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த மாதம் 15ம் தேதி வெளியிடவிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் தங்களது சிம்பிள் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். இதனை மூலம், அதிகளவிலான எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனப் பயன்பாட்டை ஊக்கவிக்க முடியும் எனவும் கூறுகிறது சிம்பிள் எனர்ஜி.
சிம்பிள் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: வசதிகள்
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்ட அதே பிளாட்ஃபார்மையே இந்த சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டருக்கும் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். 3.7kWh பேட்டரியுடன் 160 கிமீ ரேஞ்சுடன் புதிய ஸ்கூட்டரை அந்நிறுவனம் உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது. மேலும், நிஜ உலக ரேஞ்சை உயர்த்துவதற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட டயர்களை புதிய சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டரில் அந்நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. 30 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வசதியுடன், பிராக்டிகாலிட்டி மற்றும் பெர்ஃபாமன்ஸ் ஆகிய இரண்டையும் சரிசமமாக புதிய ஸ்கூட்டரில் வழங்க முயற்சி செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி. டிசம்பர் 15ம் தேதி முன்பதிவையும், அதனைத் தொடர்ந்து 2024 ஜனவரியில் டெலிவரியையும் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.