நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த 'சிம்பிள் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது!
தயாரிப்புக்கு தயாரான நிலையில் இருக்ககூடிய தங்களுடைய 'சிம்பிள் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி. நீண்ட காலமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை. இறுதியில் தற்போது இந்த ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது. ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகளுடன் கூடிய 7-இன்ச் TFT டிஸ்பிளே, நான்கு ரைடிங் மோடுகள், எல்இடி விளக்குகள், 30 லிட்டர் பூட் ஸ்பேஸ், பூட் லைட் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது சிம்பிள் ஒன். ஓலா S1 ப்ரோ, ஏத்தர் 450X, டிவிஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக் மற்றும் விடா V1 ப்ரோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக களமிறங்குகிறது சிம்பிள் ஒன்.
எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் விலை:
8.5kW பவர் மற்றும் 72Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கிறது சிம்பிள் ஒன். இதன் 5kWh லித்தியம்-அயன் பேட்டரியுடன் 212 கிமீ ரேஞ்சை அளிக்கிறது சிம்பிள் ஒன். இந்த 5kWh பேட்டரியையே இரண்டாகப் பிரித்து ஒன்றை நிரந்தரமாகவும், மற்றொன்றை மாற்றிக் கொள்ளும் வகையிலும் வழங்கியிருக்கிறது சிம்பிள் ஒன். வீட்டில் பயன்படுத்தும் சார்ஜர் மூலம் சுமார் 6 மணி நேரத்தில் 0-80% சார்ஜ் ஆகிவிடுமாம் இதன் பேட்டரி. இந்தியாவில் ரூ.1.45 - ரூ.1.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த சிம்பிள் ஒன். இந்த விலையுடன் தற்போது விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த ஸ்கூட்டராக இருக்கிறது சிம்பிள் ஒன். பெங்களூருவில் இதன் டெலிவரி வரும் ஜூன் 6 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.