அயானிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை ஷாரூக்கானுக்கு பரிசாக அளித்த ஹூண்டாய்
'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானின் கார் கலெக்ஷனில் புதிதாக இணைந்திருக்கிறது ஹூண்டாய் அயானிக் 5 (IONIQ 5) எலெக்ட்ரிக் கார் மாடல். இது ஷாரூக்கானின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுமாகும். ஆனால், இதனை ஷாரூக்கான் வாங்கவில்லை. மாறாக, ஷாரூக்கான் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடராக இணைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, அவருக்கு இந்தியாவில் உற்பத்தியான 1,100-வது அயானிக் 5 மாடலை பரிசாக அளித்திருக்கிறது அந்நிறுவனம். ஹூண்டாயின் இந்தப் பரிசுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஷாரூக்கான், ஹூண்டாய் நிறுவனத்திற்கும், தனக்கும் இந்த 2023 ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் அயானிக் 5:
கிராவிட்டி கோல்டு மேட் ஃபினிஷ் கொண்ட அயானிக் 5 மாடலை ஷாரூக்கானுக்கு வழங்கியிருக்கிறது ஹூண்டாய். 12.3 இன்ச் திரைகள், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த அயானிக் 5 மாடல். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அயானிக் 5 மாடலானது, 214hp பவரை வெளிப்படுத்தக்கூடிய ரியர் வீல் டிரைவைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், 72.6kWh பேட்டரி பேக் மற்றும் 631 கிமீ ARAI ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடலுக்குப் போட்டியாக, ரூ.45.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹூண்டாய் அயானிக் 5.