இந்தியாவில் தங்கள் முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடுத் திட்டமிட்டிருக்கும் ஸ்கோடா!
ஹூண்டாய், டாடா, கியா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் காரையாவது இந்தியாவில் வெளியிட்டிருக்க, எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை இன்னும் இந்தியாவில் தொடங்காமலேயே இருந்து வருகிறது ஸ்கோடா. இந்நிலையில், அந்நிறுவனம் தங்களுடைய 'என்யாக் iV' எலக்ட்ரிக் காரை தங்களுடைய முதல் எலக்ட்ரிக் காராக இந்தியாவில் வெளியிடவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இந்த எலக்ட்ரிக் காருக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே, இனி வரும் ஆண்டுகளில் எந்த விதமான எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு கொண்டு வரலாம் என்பது குறித்து முடிவு செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். என்யாக் iV மாடலானது ஸ்கோடாவின் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யூவியாகும். ஃபோக்ஸ்வாகனின் பார்ன்-எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த என்யாக் iV, ஒரு பக்கா 5 சீட்டர் எலெக்ட்ரிக் கார்.
என்யாக் iV:
இந்தப் புதிய காரை இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்து வருகிறது ஸ்கோடா. என்யாக் iV-யிலேயே பல ப்ரோட்டோடைப்கள் இருக்க பொதுவாக ஒரு குறிப்பிட்ட ப்ரோட்டோடைப்பை அதிகமாக சோதனை செய்து வருகிறது ஸ்கோடா. அதனையே அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக 265hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு மோட்டார்கள், 77kW பேட்டரி, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 513 கிமீ ரேஞ்சு கொண்ட என்யாக் iV 80x மாடலையே அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வாகன் ID 4 எலெக்ட்ரிக் காரின் கட்டுமானமும், என்யாக் iV-யின் கட்டுமானமும் கிட்டத்தட்ட ஒன்று தான். அந்நிறுவனமும் ID 4-ஐ இந்தியாவில் வெளியிடுவதற்காக சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.