ரூ.4.25 லட்சம் விலையில் வெளியான ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஸ்பெஷல் எடிஷன்
கோவாவில் நடைபெற்று வரும் மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வில் தங்களது புதிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனைப் போலவே அந்த பைக்கையும் வெளியிட்டது ராயல் என்ஃபீல்டு. ஆனால், கூடுதலாக ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக இன்னும் வெளியாகாத ஷாட்கன் 650 மாடலின் லிமிடட் எடிஷன் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. கைகளாலேயே வண்ணம் தீட்டப்பட்ட, வெறும் 25 ஸ்பெஷல் எடிஷன் ஷாட்கன் 650 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதுவும் மோட்டோவெர்ஸ் நிகழ்வுக்கு வந்திருப்பவர்களில், புதிய ஷாட்கன் பைக்கை வாங்கு விரும்புபவர்களில் 25 பேரை குலுக்கல் முறையிலேயே தேர்ந்தெடுக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650:
அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 மாடலில், சூப்பர் மீட்டியார் 650 மாடலில் பயன்படுத்தியிருக்கும் பல்வேறு பாகங்களைப் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இன்ஜினும் சூப்பர் மீட்டியாரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 649சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸூன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 47hp பவர் மற்றும் 52Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஷாட்கன்னுக்கான இன்ஜின் டியூனிங் குறித்த தகவல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த ஷாட்கன் 650 லிமிடட் எடிஷன் மாடலை ரூ.4.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.