புதிய 450சிசி பவர் க்ரூஸர் ஒன்றை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு
டுகாட்டி டியாவெல் மாடலைப் போலவே புதிய பைக் பவர் க்ரூஸர் மாடல் ஒன்றை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய மாடலை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் தொடக்கநிலை டிசைனானது இணையத்தில் கசிந்திருக்கிறது. பெனெல்லி 502C மாடலின் டிசைனை ஒத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டின் புதிய பவர் க்ரூஸரின் டிசைன். K1D என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டின் இந்த புதிய பைக் குறித்த பிற தகவல்களும் தற்போது இணையத்தில் கசிந்திருக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு பவர் க்ரூஸர்:
புதிய பவர் க்ரூஸரில், தங்கள் நிறுவனத்தின் பிற மாடல்களான ஹிமாலயன் 450, ரோட்ஸ்டர் 450 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 450 ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அதே 450 சிசி லிக்விட் கூல்டு இன்ஜினையே பயன்படுத்தவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. 45hp பவர் மற்றும் 40Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்ட இந்த இன்ஜினானது, 6 ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்படவிருக்கிறது. எல்இடி லைட்டிங், டூயல் சேனல் ABS, கம்யூட்டரைஸ்டு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டப் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய பிற வசதிகளும் புதிய பைக்கில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய மாடலை இந்தியாவில் ரூ.2.70 லட்சம் முதல் ரூ.2.80 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.