'மீட்டியார் 350'யில் புதிய வேரியன்டான 'ஆரோரா'வை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் பெரிய இன்ஜின் கொண்ட புதிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு வெளியிடப்போவதாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட வரும் 'மீட்டியார் 350' மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் தற்போது ஃபையர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று மீட்டியார் 350 வேரியன்ட்களை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. தற்போது டாப் எண்டான சூப்பர்நோவா வேரியன்டிற்கு அடுத்தபடியாக 'ஆரோரா' என்ற புதிய வேரியன்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அம்சங்களை ஸ்டாண்டர்டாகவே கொண்டு வெளியாகியிருக்கிறது இந்த ஆரோரா வேரியன்ட்.
என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது மீட்டியார் 350 ஆரோரா?
மூன்று புதிய ரெட்ரோல வண்ணங்களில், ஆங்காங்கே சற்று கூடுதலான க்ரோம் ஃபினிஷுடன் ஸ்டைலாக வந்திறங்கியிருக்கிறது புதிய மீட்டியார் 350 ஆரோரா வேரியன்ட். இந்த வேரியன்டில் பெரிய விண்டுஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் எல்இடி முகப்பு விளக்கு ஆகியவற்றை ஸ்டாண்டர்டாகவே கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மெக்கானிக்கலாக பிற மீட்டியார் 350 வேரியன்டகளுக்கும், ஆரோரா வேரியன்டிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாமே காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே. பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புதிய மீட்டியார் 350 ஆரோரா வேரியன்டை, இந்தியாவில் ரூ.2.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
பிற வேரியன்ட்களில் சிறிய மாற்றங்கள்:
மீட்டியார் 350 மாடலில் ஆரோரா வேரியன்டின் அறிமுகத்துடன், பிற வேரியன்ட்களிலும் சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஃபையர்பால் வேரியன்டானது புதிதாக கருப்பு நிறத்தைப் பெறுகிறது. ஸ்டெல்லார் வேரியன்டில் ட்ரிப்பர் நேவிகேஷன் பாடை தற்போது ஸ்டாண்டர்டாகவே கொடுக்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம். அதேபோல், டாப் எண்டான சூப்பர்நோவாவில் அலுமினியிம் ஸ்விட்ச் க்யூப் மற்றும் எல்இடி முகப்பு விளக்கையும் வழங்கவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்த மாற்றங்களுடன் மீட்டியார் 350-ன் ஃபையர் பால் வேரியன்டை ரூ.2.06 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஸ்டெல்லார் வேரியன்டை ரூ.2.16 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், சூப்பர்நோவா வேரியன்டை ரூ.2.30 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யவிருக்கிறது அந்நிறுவனம்.