ஜனவரி முதல் புதிய ஹிமாலயன் பைக்கின் விலையை உயர்த்தவிருக்கும் ராயல் என்ஃபீல்டு
கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஹிமாலயன் பைக்கின் விலையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. தற்போது வெளியீட்டு விலையான ரூ.2.69 லட்சம் முதல் ரூ.2.84 லட்சம் வரையிலான விலைகளிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன். ஆனால், இது டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே. டிசம்பர் 31ம் தேதிக்குப் பிறகு ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க விரும்புபவர்கள், உயர்த்தப்பட்ட விலையிலேயே வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பதிவு செய்து விட்டு, ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு அதில் மாற்றங்கள் செய்தாலும், புதிய விலையிலேயே வாடிக்கையாளர் பைக்கை வாங்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ராயல் என்ஃபீஸ்டு ஹிமாலயன்:
முன்னர் விற்பனையில் இருந்து ஹிமாலயன் 411 மாடலுக்கு மாற்றாக, சற்று பெரிய இன்ஜினைக் கொண்ட புதிய ஹிமாலயன் 452 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. 17-லிட்டர் எரிபொருள் டேங்க், வட்ட வடிவ LED முகப்பு விளக்கு, அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வகையிலான விண்டு ஸ்கிரீன், வயர் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய ஹிமாலயன். பாதுகாப்பிற்காக, இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் புதிய ஹிமாலயனில் 39hp பவர் மற்றும் 40Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, புதிய 452சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.