ஷாட்கன் 650 மாடலுக்கு ARAI அமைப்பிடம் அனுமதி பெற்றிருக்கிறது ராயல் என்ஃபீல்டு
இந்த மாதத் தொடக்கத்தில் புதிய இன்ஜினைக் கொண்டு அப்டேட் செய்யப்பட்ட புதிய புல்லட் 350 மாடலை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அதனைத் தொடர்ந்து, 450சிசி மற்றும் 650சிசி இன்ஜின்களைக் கொண்ட இரண்டு பைக்குகளை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதில் 650சிசி இன்ஜினைக் கொண்ட ஷாட்கன் 650 மாடலுக்கான அனுமதியை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பிடம் பெற்ற நிலையில், தற்போது இந்தியாவின் ARAI அமைப்பிடமிருந்து அனுமதி பெற்றிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ராயன் என்ஃபீல்டின் காண்டினென்டல் GT 650, இன்டர்செப்டார் 650 மற்றும் சூப்பர் மீட்டியார் 650 ஆகிய 650சிசி இன்ஜின் கொண்ட பைக்குகள் வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது ஷாட்கன் 650.
ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்குகள்:
மேற்கூறிய ராயல் என்ஃபீல்டின் 650 சீரிஸ் பைக்குகளில் பயன்படுத்தப்பட்ட அதே 648சிசி பேரரல் ட்வின் இன்ஜினையே புதிய ஷாட்கன் 650 மாடலிலும் பயன்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். பாபர் ஸ்டைலில் இருக்கக்கூடிய புதிய ஷாட்கன் 650-யை தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்காக அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டு வருகிறது. இத்துடன் 40hp பவரை வெளிப்படுத்தக்கூடிய முந்தைய மாடலை விட பெரிய இன்ஜின் கொண்ட ஹிமாலயன் 452 பைக்கையும் உருவாக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்த இரண்டு பைக்குகளையும் அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடுதல் அப்டேட்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் விலையும் அதற்கேற்ற வகையில் கொஞ்சம் அதிகமாவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.