ஸ்பைஷாட்டில் சிக்கிய புதிய RE 650சிசி மாடல், கிளாஸிக் 350-யின் பெரிய வெர்ஷனா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களுடைய 650சிசி பிளாட்ஃபார்மின் போர்ட்ஃபோலியோவை பெரிய அளவில் அப்டேட் செய்ய முடிவெடுத்திருக்கிறது போல. பல்வேறு புதிய 650சிசி பைக்குகளை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது. ஏற்கனவே, அந்நிறுவனத்தின் 650சிசி பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட அட்வென்சர் மாடல், ஸ்கிராம்ப்ளர் மாடல் மற்றும் ஷாட்கன் பைக் எனப் பல்வேறு புதிய மாடல் பைக்குகளின் ஸ்பைஷாட் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புதிதாக சோதனை செய்யப்பட்டு 650சிசி பேரலல் ட்வின் இன்ஜின் கொண்ட கிளாஸிக் மாடலின் புகைப்படங்களும் தற்போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கின்றன. கிளாஸிக் 350-யின் ஸ்டைலிங்குடன் ஒத்திருக்கிறது இந்த கிளாஸிக் 650-யின் ஸ்டைலிங்.
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 650 ஸ்பைஷாட்:
நிறைய க்ரோமியம் அக்சென்ட் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த கிளாஸிக் 650-யில் எல்இடி முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தியிருக்கிறது RE. கிளாஸிக் 350-யில் தற்போது ஹாலஜன் முகப்ப விளக்குகளே பயன்பாட்டில் இருக்கின்றன. 650சிசி மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் ட்வின்-ஷாக் அப்சார்பர் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்டர்செப்டார் 650 மற்றும் காண்டினென்டல் GT-யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே ட்யூனிங்கை கிளாஸிக் 650 இன்ஜினில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பயன்படுத்தாது. எனினும், அதிலிருந்து அதிக வேறுபாட்டுடன் புதிய இன்ஜின் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பைக்கின் ஸ்டைலிங்கானது கிளாஸிக்கை போலவே தான் இருக்கிறது எனினும், புல்லட்டின் ஸ்டைலிங்கும் கிட்டத்தட்ட கிளாஸிக்கின் ஸ்டைலிங்கை ஒத்தே இருக்கும் என்பதால், இந்த ஸ்பைஷாட்டில் சிக்கியிருப்பது புல்லட் 650-யாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.