LOADING...
டாடாவுடன் கைகோர்த்த குவால்காம்! அசாமில் தயாராகப்போகும் அதிநவீன கார் சிப்கள்! மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு மெகா மைல்கல்

டாடாவுடன் கைகோர்த்த குவால்காம்! அசாமில் தயாராகப்போகும் அதிநவீன கார் சிப்கள்! மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு மெகா மைல்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
05:01 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச செமிகண்டக்டர் ஜாம்பவானான குவால்காம் மற்றும் இந்தியாவின் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் வாகனங்களுக்கான அதிநவீன மின்னணு மாட்யூல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. பிப்ரவரி 20, 2026 அன்று அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, டாடா நிறுவனம் குவால்காம் நிறுவனத்தின் உற்பத்திப் பங்காளராகச் செயல்படும். இது இந்தியாவின் செமிகண்டக்டர் மற்றும் வாகன உற்பத்தித் துறையில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

அசாம்

அசாமில் அமையவுள்ள பிரம்மாண்ட ஆலை

இந்த உற்பத்தியானது அசாம் மாநிலத்தின் ஜாகிரோட் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவி வரும் புதிய செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை ஆலை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டில் இந்த ஆலை உருவாக்கப்படுகிறது. இங்கு வயர்பாண்ட், பிளிப் சிப் மற்றும் இன்டகிரேட்டட் சிஸ்டம்ஸ் பேக்கேஜிங் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது இந்தியாவின் முதல் உள்நாட்டு ஓசாட் ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றங்கள்

கார்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்

இந்தக் கூட்டணியின் மூலம் தயாரிக்கப்படும் மாட்யூல்கள், வருங்கால கார்களில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும். காருக்குள் இருக்கும் தொடுதிரை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் வேகம் மற்றும் தரம் மேம்படும். குவால்காமின் புகழ்பெற்ற ஸ்னாப்டிராகன் சிப்கள் இந்த மாட்யூல்களில் ஒருங்கிணைக்கப்படும். புதிய மென்பொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களைத் தயாரிப்பதற்கான வடிவமைப்பை இது எளிதாக்கும். கார் தயாரிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான சிப்களை ஒருங்கிணைந்த மாட்யூல்களாகப் பெறுவதால், புதிய கார்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் காலம் குறையும்.

Advertisement

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா மற்றும் உலகளாவிய தாக்கம்

இந்தக் கூட்டணி இந்திய வாகனத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய கார் நிறுவனங்களுக்கும் தேவையான சிப்களை இந்தியாவில் இருந்தே வழங்க உதவும். "டாடா எலக்ட்ரானிக்ஸ் உடனான எங்களது பணி, இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலை வலுப்படுத்துவதில் ஒரு மைல்கல்லாகும்" என்று குவால்காம் நிர்வாகி நகுல் துக்கல் தெரிவித்துள்ளார். டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஇஓ ரந்தீர் தாக்கூர் பேசுகையில், தங்களது அதிநவீன பேக்கேஜிங் தீர்வுகள் மூலம் குவால்காம் நிறுவனத்திற்கு உயர்தரப் பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement