இந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே
இந்தியாவில் 2018-ல் தங்களுடைய 'கேயன்' மாடல் காரையும், 2019-ல் தங்களுடைய 'கேயன் கூப்' மாடலையும் வெளியிட்டது ஜெர்மனியைச் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே. இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கூறிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அந்நிறுவனம் உலகமெங்கும் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. போர்ஷே கேயன் ஃபேஸ்லிப்ட் மாடலானது, முந்தைய மாடலை விட ரூ.10 லட்சம் அதிகமாக, ரூ.1.36 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது. போர்ஷே கேயன் கூப் ஃபேஸ்லிப்ட் மாடலானது, அதன் முந்தைய மாடலை விட, ரூ.7 லட்சம் அதிகமாக, ரூ.1.42 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
போர்ஷே கேயன் ஃபேஸ்லிப்ட்:
கேயன் மற்றும் கேயன் கூப் ஆகிய இரு மாடல்கள் அடிப்படை வேரியன்டை மட்டுமே தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கறது போர்ஷே. இந்த மாடல்களின் E-ஹைபிரிட் வெர்ஷன்களையும் தங்களுடைய இந்திய வலைப்பக்கத்தில் அந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது. எனினும், அதன் விலைகளை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. முந்தைய மாடலை விட 12.8hp வரை அதிகமான பவரை உற்பத்தி செய்யக்கூடிய 3.0 லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜினைப் பெற்றிருக்கிறது கேயன். மொத்தமாக 343hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது இந்த இன்ஜின். இந்தியாவில் ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட், ஜாகுவார் F-பேஸ், ஆடி Q8 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் GLE-கிளாஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது போர்ஷே கேயன்.