இந்தியாவில் 'S1' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விற்பனையை நிறுத்திய ஓலா
இந்தியாவில் ஓலாவின் 'S1 ஏர்' (Ola S1 Air) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்பு அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த S1 ஸ்கூட்டரின் விற்பனைை நிறுத்தியிருக்கிறது ஓலா. இனி இந்தியாவில் S1 ஏர் மற்றும் S1 ப்ரோ ஆகிய மாடல்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிகவும் விலை குறைந்த மாடலாகவும் இருக்கிறது ஓலா S1 ஏர். S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், க்ரூஸ் கண்ட்ரோல், டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஓலா நிறுவனம். இந்த மாடலை ரூ.1,19,000 விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓலா.
ஓலா S1 ஏர்:
S1 ஏர் மாடலில், ஒரு முறை சார்ஜுக்கு 125 கிமீ வரை ரேஞ்சு கொண்ட 3kWh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ஓலா. இந்த பேட்டரியை 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இத்துடன் 4.5kW பவரை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரை S1 ஏரில் வழங்கியிருக்கிறது ஓலா. இந்த மோட்டாருடன், 40 கிமீ வேகத்தை 3.3 நொடிகளிலும், 60 கிமீ வேகத்தை 5.7 நொடிகளிலும் எட்டிப் பிடிக்கிறது S1 ஏர். அதிகபட்சம் 90 கிமீ வேகம் கொண்ட S1 ஏரில் எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று மோடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த மாடலின் இரண்டு வீல்களிலுமே ட்ரம் ப்ரேக்கையே கொடுத்திருக்கிறது ஓலா.