சந்தா முறையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி.. ஓலா எலெக்ட்ரிக்கின் புதிய திட்டம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஓலா எலெக்ட்ரிக். தற்போது இந்தியாவில் S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1 X என மூன்று மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வழங்கப்பட்டு வரும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை சந்தா முறையில் அளிக்கும் வகையிலான புதிய திட்டத்தை அமல்படுத்த அந்நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாலையில் பயணிக்கும் போது நாம் ஆக்ஸிலரேட்டரைப் பயன்பாடுத்தாமலேயே வாகனத்தை ஒரே வேகத்தில் சீராக இயக்க இந்த க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உதவுகிறது. அந்த வசதியையே தற்போது சந்தா திட்டத்தின் மூலம் வழங்கத் திட்டமிட்டு வருகிறது ஓலா.
சந்தா முறையில் எப்படி க்ரூஸ் கண்ட்ரோல்?
எலெக்ட்ரிக் வாகன மற்றும் ஆட்டோமொபைல் சந்தையானது போட்டி நிறைந்த சந்தையாக மாறி வரும் நிலையில், வாகன விற்பனையில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கடந்து பிற வருவாய் மூலங்களைத் தேடி வருகின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். அந்த வகையில், தங்களுடைய வருவாயை உயர்த்தவே இந்த க்ரூஸ் கண்ட்ரோல் சந்தா முறையைப் பரிசீலனை செய்து வருகிறது ஓலா. இந்த முறையின் படி, க்ரூஸ் கண்ட்ரோல் வசதியானது ஒரு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதனை ஒவ்வொரு மாதமும் சந்தா செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும். இல்லையெனில், வாகனத்தில் அந்தக் குறிப்பிட்ட வசதியை வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாது. இந்த வகையான திட்டம் அறிமுகப்படுத்தப்படால், அது வாடிக்கையாளர்களிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.