இந்தியாவில் புதிய புல்லட் 350 மாடலை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு
2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய புல்லட் 350 பைக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. சின்னச்சின்ன டிசைன் அப்டேட்களுடன், இன்ஜின் அப்டேட்டையும் பெற்றிருக்கிறது புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350. மிலிட்டரி பிளாக், மிலிட்டரி ரெட், ஸ்டாண்டர்டு பிளாக், ஸ்டாண்டர்டு மரூன் மற்றும் பிளாக் கோல்டு என் ஐந்து புதிய நிறங்களில் புதிய புல்லட்டை வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்தப் புதிய நிறங்கள் புல்லட்டிற்கு புதிய மற்றும் ராயலான லுக்கைக் கொடுக்கின்றன. மூன்று வேரியன்ட்களாக வெளியாகியிருக்கும் புல்லட்டின் அடிப்படை வேரியன்டில் ரியர் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு மற்றும் டாப் வேரியன்டில் ரியர் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350: இன்ஜின் மற்றும் விலை
புதிய புல்லட் 350ல், மீட்டியாக் 350, கிளாஸிக் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளில் பயன்படுத்தியிருக்கும் J சீரிஸ் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இது முந்தைய இன்ஜின் உற்பத்தி செய்த, 20hp பவர் மற்றும் 27Nm டார்க்கையே உற்பத்தி செய்கிறது. புல்லட் 350யின் அடிப்படைய வேரியன்டானது ரூ.1.73 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு வேரியன்டை ரூ.1.97 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் வேரியன்டை ரூ.2.15 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஸ்டாண்டர்டு வேரியன்டிற்கும், டாப் வேரியன்டிற்கு வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாண்டர்டின் சிங்கிள் டோன் பெயின்ட் ஸ்கீமும், டாப் வேரியன்டில் டூயல் டோன் பெயின்ட் ஸ்கீமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.