வேற்று மாநிலத்தில் 3 ஆண்டுகள் வரை வண்டியை ஓட்டலாம்! Re-registration விதிகளில் மாற்றம் கொண்டு வரும் மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH), மோட்டார் வாகன சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒரு மாநிலத்தை சேர்ந்த வாகனத்தை மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கு மறுபதிவு செய்யாமல் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, இந்த கால அவகாசம் வெறும் 1 ஓராண்டாக மட்டுமே உள்ள நிலையில், அதை 3 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான வரைவு திருத்தங்கள் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
விதி
தற்போதைய விதி என்ன?
தற்போதைய மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 47-ன் படி, ஒரு வாகனத்தை அதன் சொந்த மாநிலத்தை தவிர வேறு ஒரு மாநிலத்திற்கு எடுத்துச் சென்று 12 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தினால், அந்தப் புதிய மாநிலத்தில் வாகனத்தை மீண்டும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணிமாறுதல் காரணமாகவோ, மாணவர்கள் படிப்பிற்காகவோ வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, 1- 2 ஆண்டுகளில் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பும் சூழல் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், புதிய மாநிலத்தில் வாகனத்தை மறுபதிவு செய்வதும், மீண்டும் சொந்த மாநிலத்திற்கு வரும்போது பழைய பதிவிற்கு மாறுவதும் மக்களுக்கு மிகப்பெரிய அலைச்சலையும், பண விரயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே இந்த நீட்டிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
டிஜிட்டல் அபராதம் மற்றும் புதிய விதிகள்
வாகன மறுபதிவு விதிகளின் தளர்வு மட்டுமின்றி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பல குற்றவியல் நடவடிக்கைகள் தற்பொழுது நீக்கப்பட்டு அபராதங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே அபராதங்களை விதிப்பதற்கும், அதற்கான மேல்முறையீட்டு அதிகாரிகளை நியமிப்பதற்கும் அனைத்து மாநிலங்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்னணு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற புதிய விதியும் இந்த வரைவு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.