
'காமெட் EV' வேரியன்ட்களின் விலையை அறிவித்தது எம்ஜி மோட்டார்!
செய்தி முன்னோட்டம்
காமெட் EV-யின் அனைத்து வேரியன்ட்களின் விலையையும் இன்று அறிவித்தது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
கடந்த மாதம் தங்களது குட்டி எலெக்ட்ரிக் மாடலான காமெட் EV-யினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்து எம்ஜி மோட்டார்.
அதன் தொடக்க நிலை வேரியன்டின் விலையையும் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அனைத்து வேரியன்ட்களின் விலையையும் அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார்.
தொடக்க நிலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்காக இந்திய சந்தையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் காமெட் EV, இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரன் eC3 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜி மோட்டார்
விலை மற்றும் வேரியன்ட்கள்:
பேஸ், பிளே மற்றும் ப்ளஷ் என மூன்று வேரியன்ட்களில் வெளியாகியிருக்கிறது காமெட் EV.
காமெட் EV பேஸ் - ரூ.7.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை)
காமெட் EV பிளே - ரூ.9.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை)
காமெட் EV ப்ளஷ்- ரூ.9.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை)
மேற்கூறிய விலைகளை நிர்ணயித்திருக்கிறது எம்ஜி மோட்டார். மேலும், இந்த விலை ஆரம்ப சலுகையாக முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மே 15-ம் தேதி முதல் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் புக்கிங்குகள் தொடங்கும் எனவும், அதனைத் தொடர்ந்து மே 22-ம் தேதி முதல் டெலிவரிக்கள் துவங்கும் எனவும் அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார்.