புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடானை உருவாக்கி வரும் மெர்சிடீஸ் பென்ஸ்
புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடான் ஒன்றை உருவாக்கி வருகிறது ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ். இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டு வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அதனை சாலைகளில் சோதனை செய்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. பென்ஸின் பிற எலெக்ட்ரிக் மாடல்களான EQS மற்றும் EQE-யை விட சற்று ஸ்லீக்கான டிசைனைக் கொண்டிருக்கிறது மெர்சிசீஸ் பென்ஸின் புதிய எலெக்ட்ரிக் கார். 2030ம் ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் கார் நிறுவனமாகி விடத் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சிடீஸ் பென்ஸின் புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் கார்:
இந்தப் புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் காரை, எலெக்ட்ரிக் கார்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட தங்களுடைய MB.EA பிளாட்ஃபார்மின் மீது கட்டமைத்து வருகிறது அந்நிறுவனம். இந்தப் புதிய C-கிளாஸ் எலெக்ட்ரிக் செடான் சந்தைக்கு வரும் அதே நேரத்தில் தான், மெர்சிடீஸ் பென்ஸின் போட்டியாளரான பிஎம்டபிள்யூவின் புதிய எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரவிருக்கிறது. எனவே, அந்த இரு கார்களும் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய C-கிளாஸ் செடானை EQC என்ற பெயரில் அந்நிறுவனம் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், 2024ம் ஆண்டோடு EQ என்ற பெயரின் பயன்பாட்டையே மெர்சிடீஸ் பென்ஸ் நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய காருக்கு முற்றிலும் புதிய பெயரை அந்நிறுவனம் பரிசீலனை செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன.