சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
2023ம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு தொடங்கவிருப்பதை முன்னிட்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பல்வேறு நிறுவனங்களும், தங்களுடைய கார்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. தங்களுடைய XUV400 எலெக்ட்ரிக் காரின் EL வேரியன்டிற்கு அதிகபட்சமாக ரூ.4.2 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்து கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறது மஹிந்திரா. பிற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்களான எம்ஜி மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களும், தங்களுடைய ZS EV மற்றும் டிகோர் EV ஆகிய மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கின்றன. ஆனால், இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறைந்த காலத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எலெக்ட்ரிக் கார்களுக்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்:
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ZS EV எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு, ரூ.50,000 வரை தள்ளுபடியும், ரூ.50,000 பரிமாற்ற சலுகையும் அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார். இது தவிர, கூடுதலாக கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் லாயல்டி சலுகைகளும் உண்டு. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தக் காரின் விலையை ரூ.2.2 லட்சம் வரை எம்ஜி நிறுவனம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலைத் தவிர, தங்களுடைய சமீபத்திய மாடலான காமெட் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு, கார்ப்பரேட் சலுகையாக ரூ.5,000-மும், லாயல்டி சலுகையாக ரூ.20,000-மும் எம்ஜி வழங்குகிறது. இத்துடன் முதல் வருட இன்சூரன்ஸூம் இலவசமாக வழங்கப்படுகிறது.