4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்?
நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடைசியாக வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகவிருக்கிறது மாருதி சுஸூகி ஜிம்னி. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கூடிய 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜினையே புதிய ஜிம்னியில் பயன்படுத்தியிருக்கிறது மாருதி. மேலும், ஜிம்னியின் அனைத்து வேரியன்ட்களிலும் 4-வீல் டிரைவையே ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். ஆனால், இந்த ஜிம்னியில் 2-வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கூடிய வேரியன்டை வெளியிடும் திட்டம் மாருதியிடம் இல்லை. 1970-களில் முதல் முறையாக ஜப்பானில் வெளியான ஜிம்னி அதன் ஆஃப்ரோடிங் திறன்களுக்காகவே இன்று வரை உலகம் முழுவதும் அறியப்படும் மாடலாக இருக்கிறது. எனவே, இதனை முழுமையான ஆஃப்ரோடராக மட்டுமே வைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது மாருதி.
ஜிம்னி Vs தார்:
ஜிம்னியின் ஆஃப்ரோடிங் திறனை பாதிக்கும் எந்தவொரு வசதியையும் அதில் சேர்க்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இதே போல 4-வீல் டிரைவுடன் ஆஃப்ரோடராகவே இந்தியாவில் அறிமுகமானது மஹிந்திராவின் தார். ஆனால், அதன் 2-வீல் டிரைவ் வெர்ஷனை அறிமுகப்படுத்திய பின், தாரின் விற்பனை தாறுமாறாக உயர்ந்தது. 4-வீல்-டிரைவை விட, 2-வீல் டிரைவ் ரூ.2.5 லட்சம் குறைவாக இருந்ததே அதன் வெற்றிக்கு காரணம். கடந்த வாரம் ஒரு லட்சம் விற்பனை மைல்கல்லையும் எட்டியிருக்கிறது தார். தற்போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தாரின் 2-வீல் டிரைவுக்கு அதிக மவுசு இருக்கிறது. மாருதி புதிய ஜிம்னியின் விலையை எப்படி நிர்ணயிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்தியாவில் அதன் வரவேற்பு இருக்கும். 5-டோர் ஜிம்னியை இந்தியாவிற்காகவே மாருதி உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.