ஸ்கார்ப்பியோ N மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய பிக்-அப் கான்செப்டை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா
தென்னாப்பிரிக்காவின் நேற்று நடைபெற்ற நிகழ்வில், கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் மாடலை மட்டுமல்லாது, இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்கார்ப்பியோ N மாடலை அடிப்படையாகக் கொண்ட பிக்-அப் கான்செப்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடலை அடிப்படையாகக் கொண்ட பிக்-அப்பை, பிக் அப் மானிக்கர் என அந்நிறுவனம் அழைத்து வரும் நிலையில், இந்த புத்ய ஸ்கார்ப்பியோ N பிக்-அப்பை குளோபல் பிக்-அப் என அழைக்கிறது அந்நிறுவனம். குளோபல் Ncap மற்றும் ஐரோப்பிய Ncap-களில் சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்த, இந்த புதிய பிக்-அப்பில், அடுத்த தலைமுறை லேடர் பிரேம்-சேஸியை பயன்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. ஸ்கார்ப்பியோ N-ஐ அடிப்படையாகக் கொண்ட பிக்-அப் எனப் பார்த்தவுடனேயே கூறிவிடும் வகையில், பல இடங்களில் டிசனை அப்படியே பயன்படுத்தியிருக்கிறது மஹிந்திரா.
மஹிந்திரா குளோபல் பிக்-அப்:
இந்த புதிய பிக்-அப்பின் இரண்டாம் தலைமுறை mHawk டீசல் இன்ஜினைப் பயன்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மஹிந்திரா. மேலும், இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்காகவே பிரதானமாக இந்த பிக்-அப்பை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மஹிந்திரா. மேற்கூறிய மூன்று நாடுகளிலும், mHawk டீசல் இன்ஜினையே பயன்படுத்தவிருக்கும் நிலையில், சில ASEAN நாடுகளில் மட்டும் ஸ்கார்ப்பியோ N மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெட்ரோல் இன்ஜினையே குளோபள் பிக்-அப்பிலும் பயன்படுத்தி வெளியிடத் திட்டமிருக்கிறது அந்நிறுவனம். 2025-லேயே இந்தப் புதிய பிக்-அப்பையும் விற்பனைக்கு ஏற்ற வடிவில் உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டு வருகிறது மஹிந்திரா நிறுவனம்.