XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது மஹிந்திரா
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் XUV300 காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, மஹிந்திரா நிறுவனம். 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட XUV300-ஐ, மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், 4 வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வந்தது மஹிந்திரா. ஏற்கனவே விற்பனையில் இருந்த, W4, W6, W8, W8(O) வேரியன்ட்களுடன் புதிதாக W2 என்ற அடிப்படை வேரியன்ட் ஒன்றையும், W4 வேரியன்டில் டர்போ ஸ்போர்ட் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட மாடல் ஒன்றையும் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. இந்தப் புதிய வேரியன்ட்களில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
மஹிந்திரா XUV300 W2 மற்றும் W4:
புதிய W2 அடிப்படை வேரியன்டை, 110hp பவர் மற்றும் 200Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் மட்டுமே வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. மேலும், தற்போது W4 வேரியன்டின் அனைத்து மாடல்களிலும் சன்ரூஃப் வசதியை அளித்திருக்கிறது மஹிந்திரா. முன்னர் இந்த வசதி W6 மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியன்ட்களில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் W2 வேரியன்டை, ரூ.7.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், W4 டர்போஸ்போர்ட் வேரியன்டை, ரூ.9.29 லட்சம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. அடுத்த ஆண்டு XUV300-ன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.