சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிக்க டால்பியுடன் கைகோர்க்கும் மஹிந்திரா
இந்தியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களில் சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிப்பதற்காக டால்பி அட்மாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. ஹார்மன் ஆடியோ சிஸ்டத்துடன், காரில் பயணம் செய்யும் போது டால்பியுடன் இணைந்து 360 டிகிரி ஆடியோ அனுபவத்தை அளிக்கத் திட்டமிட்டு வருகிறது மஹிந்திரா. 2021ம் ஆண்டு லூசிட் நிறுவனத்துடன் கைகோர்த்து, ஆட்டோமோட்டிவ் ஆடியோ அனுபவத்தை வழங்கத் தொடங்கியது டால்பி. அந்நிறுவனத்தைத் தொடர்ந்து, மெர்சிடீஸ் பென்ஸ், வால்வோ, போல்ஸ்டார் மற்றும் லோட்டஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது டால்பி. இதனைத் தொடர்ந்து தற்போது டால்பியுடன் கைகோர்த்திருக்கும் முதல் இந்திய நிறுவனமாகி இருக்கிறது மஹிந்திரா.
சிறப்பான ஆடியோ அனுபவம்:
டால்பியுடன் கைகோர்த்து சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டிருந்தாலும், அதனை தங்களுடைய BE எலெக்ட்ரிக் வாகனங்களில் மட்டுமே வழங்க முடிவு செய்திருக்கிறது மஹிந்திரா. அதாவது, எரிபொருள் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இல்லாமல், எலெக்ட்ரிக் வாகனமாகவே உருவாக்கப்படும் தங்களுடைய பார்ன் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் மட்டுமே இந்த டால்பி அட்மாஸ் வசதியை அளிக்கவிருக்கிறது மஹிந்திரா. 360 டிகிரி 3D ஆடியோ, மேம்படுத்தப்பட்ட நேவிகேஷன் ப்ராம்ப்ட்ஸ் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அளிக்க இந்த ஆடியோ வசதிகள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இந்த டால்பி அட்மாஸ் வசதியுடன், மேம்படுத்தப்பட்ட ஆடியோ அனுபவத்தைப் பயனர்களுக்கு அளிக்க முடியும் என நம்புகிறது மஹிந்திரா.