
கியா தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருட்டு; ஆந்திர காவல்துறை விசாரணை
செய்தி முன்னோட்டம்
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா, ஆந்திராவின் பெனுகொண்டாவில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து ஐந்து ஆண்டுகளில் சுமார் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளது.
நிறுவனத்தின் உள் ஆய்வில் இந்த திருட்டு தெரிய வந்ததைத் தொடர்ந்து, மார்ச் 19 அன்று கியா நிறுவனம் காவல்துறையிடம் முறையான புகாரை அளித்துள்ளது.
பெனுகொண்டா துணைப்பிரிவு காவல் அதிகாரி ஒய்.வெங்கடேஷ்வர்லுவின் கூற்றுப்படி, கூறப்படும் திருட்டுகள் 2020 இல் தொடங்கி சமீபத்தில் வரை கவனிக்கப்படாமல் தொடர்ந்தன.
"இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நாங்கள் விரிவாக விசாரணை நடத்த உள்ளோம்." என்று அவர் மேலும் கூறினார்.
ஊழியர்கள்
திருட்டில் ஊழியர்களுக்குத் தொடர்பா?
ஆலைக்கு கொண்டு செல்லும் போதும் அதன் வளாகத்திற்குள் இருந்தும் என்ஜின்கள் திருடப்பட்டதை முதற்கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது ஒரு உள் வேலை என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர், மேலும் தற்போது முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களிளில் யாருக்கேனும் இதில் பங்கு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
அதிகாரிகள் நடைமுறை குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ளனர், மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக நிறுவன பதிவுகளை இப்போது பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து நிறுவன அதிகாரிகள் எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.
மேலும், திருட்டுகள் இவ்வளவு நீண்ட காலத்திற்கு எவ்வாறு கண்டறியப்படாமல் போனது அல்லது திருடப்பட்ட என்ஜின்களின் மதிப்பு பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கியாவிடமிருந்து வெளியாகவில்லை.