ரூ.3.14 லட்சம் வரை மெரிடியன் மாடலின் விலையை உயர்த்தி ஜீப்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மெரிடியன் மற்றும் காம்பஸ் கார் மாடல்களின் விலையை உயர்த்தியிருக்கிறது அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப். காம்பஸ் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.29,000 முதல் ரூ.43,000 வரை உயர்த்தியிருக்கிறது ஜீப். அதேபோல், மெரிடியன் மாடலின் விலையை ரூ.42,000 முதல் ரூ.3.14 லட்சம் வரை உயர்த்தி அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். குறைந்தபட்சமாக மெரிடியன் மாடலின் X வேரியன்ட்டின் விலையை ரூ.42,000 வரை உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து மெரிடியன் லிமிடட் (O) மேனுவல் வேரின்டின் விலையானது 45,000 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மெரிடியன் அப்லேண்டு எடிஷனின் விலையே ரூ.3.14 லட்சம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
காம்பஸ் விலை உயர்வு:
மெரிடியனைப் போல, காம்பஸ் மாடலில் குறைந்தபட்சமாக ஸ்போர்ட் வேரியன்டின் விலையை ரூ.29,000 வரையிலும், மாடல் S (O) ஆட்டோமேட்டிக் ஆல்-வீல் டிரைவ் மாடலின் விலையை ரூ.43,000 வரையிலும் உயர்த்தியிருக்கிறது ஜீப். காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே இன்ஜினையே பயன்படுத்தியிருக்கிறது ஜீப். 168hp பவர் மற்றும் 350Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினே இரண்டு மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின்களுடன், 9-ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்குகிறது அந்நிறுவனம். மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் 4 வீல் டிரைவை ஸ்டான்டர்டாகவே வழங்குகிறது ஜீப்.