உள்நாட்டிலேயே தயாராகும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: B28 ரயிலின் முழு அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அதிவேக ரயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய அத்தியாயமாக, மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) வழித்தடத்திற்காக உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் நாட்டின் முதல் புல்லட் ரயில் உற்பத்தி பணிகள் பெங்களூரில் உள்ள BEML ஆலையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பியிராமல், இந்தியாவின் தட்பவெப்பநிலை மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப இந்தியப் பொறியாளர்களால் இப்புல்லட் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திறன்
மணிக்கு 280 கி.மீ சோதனை வேகம்
இந்த ரயில் மணிக்கு 280 கி.மீ வரை அதிகபட்ச சோதனை வேகத்தையும் , 249 கி.மீ வரை இயக்க வேகத்தையும் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
202 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலில் 4 மோட்டார் கார்கள் மற்றும் 4 டிரெய்லர் கார்கள் உட்பட 8 பெட்டிகள் இடம்பெறும்.
557 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்டது.
இதில் 7 தரப்படுத்தப்பட்ட பெட்டிகள் (3x2 இருக்கைகள்) மற்றும் 1 எக்ஸிகியூட்டிவ் பெட்டி (2x2 இருக்கைகள்) சேர்க்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிக பயணிகள் கூட்டத்தைக் கையாள எதிர்காலத்தில் இரண்டு 8-பெட்டி ரயில்களை இணைத்து 16-பெட்டி கொண்ட ரயிலாக இயக்கும் வசதியும் உள்ளது.
வடிவமைப்பு
நவீன வசதிகள் & மாற்றுத்திறனாளி நட்பு வடிவமைப்பு
பயணிகளின் சௌகரியமான பயணத்திற்காக ரயிலின் உட்புறம் அகலமான காலியிடங்களுடன் கூடிய வசதியான இருக்கைகள், தனிநபர் லேப்டாப்/மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் ஒவ்வொரு வரிசையிலும் இயற்கை அழகை ரசிக்கப் பரந்த ஜன்னல்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
பிளாட்ஃபார்ம் உயரத்திற்கு ஏற்ப ரயிலின் தரைப்பகுதி சீரமைக்கப்பட்டு, பிளாட்ஃபார்மிற்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கத் தானியங்கி மடிக்கக்கூடிய படிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அகலமான கதவுகள், கழிவறைகள், பிரெய்லி வழிகாட்டிப் பலகைகள் பொருத்தப்பட்டள்ளன.
LCD திரை வாயிலாக தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பயணத் தகவல்கள், அதிவேக வைஃபை இன்ஃபோடைன்மென்ட் மற்றும் அவசர காலத்தில் ஓட்டுநர்/ஊழியருடன் நேரடியாக பேச Talk-back வசதி இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பம்
காப்புத் தொழில்நுட்பம் & ஆற்றல் சேமிப்பு
ரயில் குகைகளுக்குள் செல்லும்போது ஏற்படும் Sonic Boom அதிக சத்தத்தைத் தவிர்க்கவும், காற்று எதிர்ப்பைக் குறைக்கவும் கணினி உருவகப்படுத்துதல் (CFD) மூலம் முகப்புப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 25 kV AC மின்சார விநியோகத்தில் இயங்கும் இந்த ரயில், வேகம் குறையும் போது மின்சாரத்தை மீட்டு மீண்டும் மின் அமைப்பிற்கே வழங்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலம் ஆற்றலை திறம்படச் சேமிக்கிறது.