இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக அளவிலான பயணிகள் வாகன மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை மற்றும் உற்பத்தி அளவை எட்டியிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இது குறித்த தகவல்களைக் கொண்ட அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட கடந்த அக்டோபர் மாதம் பயணிகள் வாகன விற்பனையானது 15.9% அதிகரித்து 3.89 லட்சமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பயணிகள் வாகன ஏற்றுமதியும் கடந்த ஆண்டு அக்டோபரை விட, கடந்த அக்டோபரில் 13.13%-தத்துடன் 53,920 ஆக அதிகரித்திருக்கிறது.
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை:
பயணிகள் வாகனங்களைப் போலவே, இரு சக்கர வாகன விற்பனையும் கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும் போது கடந்த அக்டோபரில் 20.1%-தத்துடன் 18.95 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், ஏற்றுமதியோ மிகக்குறைவாக 1.3% மட்டுமே உயர்ந்து 2.19 லட்சமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும் போது கடந்த அக்டோபரில், எலெக்ட்ரிக் உட்பட அனைத்து விதமான மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையானது 42% உயர்ந்து 76,940 ஆக இருக்கிறது. ஆனால், ஏற்றுமதியோ கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 25.4% குறைந்து 25,534 ஆகியிருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த அக்டோபரில் அனைத்து விதமான வாகன உற்பத்தியானது 19.62% உயர்ந்து 26.21 லட்சமாகியிருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு 21.91 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.