இனி பிரிட்டனில் நம்ம ஊரு எலக்ட்ரிக் கார்கள் தான்! வர்த்தக ஒப்பந்தத்தால் கார் நிறுவனங்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸூகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை பிரிட்டனின் எலக்ட்ரிக் கார் சந்தையைக் கைப்பற்றப் பெரிய அளவில் திட்டமிட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறிப்பிட்ட விலை வரம்பிற்குள் வரும் இந்திய தயாரிப்பு எலக்ட்ரிக் கார்களை பிரிட்டன் நாட்டிற்கு எவ்வித இறக்குமதி வரியும் இன்றி குறிப்பிட்ட கோட்டா முறையில் ஏற்றுமதி செய்யப் பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜூலை 15
ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் வரலாற்று ஒப்பந்தம்
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு வர்த்தக மதிப்பை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை முதன்மை இலக்காகக் கொண்டு இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்த ஆவணத்தின்படி, இந்த புதிய வர்த்தக விதிகள் அனைத்தும் வரும் ஜூலை 15 முதல் முறைப்படி நடைமுறைக்கு வரவுள்ளன. இது ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறைக்கும், குறிப்பாக எலக்ட்ரிக் வாகன உற்பத்திப் பிரிவிற்கும் ஒரு மிகப்பெரிய சர்வதேச நுழைவு வாயிலாகப் பார்க்கப்படுகிறது.
கோட்டா விபரங்கள்
எலக்ட்ரிக் கார்களுக்கான வரிச் சலுகை மற்றும் கோட்டா விபரங்கள்
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, இந்திய தயாரிப்பு எலக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ஹைட்ரஜன் கார்களுக்கு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் ஆறாவது ஆண்டிலிருந்துதான் முழுமையான வரிவிலக்கு சலுகைகள் கிடைக்கத் தொடங்கும். பிரிட்டன் சந்தையில் நிலவும் 20,000 பவுண்டுகள் முதல் 80,000 பவுண்டுகள் வரையிலான வெவ்வேறு விலை பிரிவுகளுக்கு ஏற்ப இந்த வரிவிலக்குக் கோட்டாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆறாவது ஆண்டில் ஒட்டுமொத்தமாக 17,600 வாகனங்கள் வரிவிலக்குடன் அனுமதிக்கப்படும் நிலையில், படிப்படியாக இந்த அளவு உயர்ந்து 15 ஆவது ஆண்டில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 88,000 வாகனங்கள் வரை வரிவிலக்குடன் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடு
80,000 பவுண்டுகளுக்கு மேல் உள்ள கார்களுக்கு சலுகை இல்லை
பிரிட்டன் சந்தைக்கான இந்த சிறப்பு வரிச்சலுகை ஒப்பந்தத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 20,000 பவுண்டுகளுக்கு கீழ் உள்ள மலிவுவிலைக் கார்கள் மற்றும் 20,000 முதல் 40,000 பவுண்டுகள் வரையிலான நடுத்தரக் கார்களுக்கு 15 ஆவது ஆண்டிலிருந்து தலா 34,000 யூனிட்டுகள் வரை வரிவிலக்குக் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 40,000 முதல் 80,000 பவுண்டுகள் வரையிலான பிரீமியம் கார்களுக்கு 20,000 யூனிட்டுகள் கோட்டா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 80,000 பவுண்டுகளுக்கு மேல் விற்கப்படும் அதீத ஆடம்பர எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் கீழ் எவ்வித வரிச் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச திட்டம்
மாருதி மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சர்வதேசத் திட்டம்
இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மூத்த நிர்வாக அதிகாரி ராகுல் பார்தி, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவியான இ-விட்டாரா காரை நாங்கள் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம். இதில் பிரிட்டன் தான் எங்களது முதன்மை சந்தையாக உள்ளது" என்றார். அதேபோல் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவுத் தலைவர் வேலுசாமி பேசுகையில், வலதுபக்க ஸ்டீயரிங் கொண்ட பிரிட்டன் சந்தையானது எங்களது எலக்ட்ரிக் எஸ்யூவிகளின் உலகளாவிய விரிவாக்கத்திற்கு மிக உகந்த இடமாகும் என்றும், ஒப்பந்தத்தின் முழு விபரங்களையும் ஆராய்ந்து அங்கு தங்களது கார்களைக் களம் இறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.