இந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு
முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 70% முதல் 100% வரையிலான இறக்குமதி வரியை விதித்திருக்கிறது மத்திய அரசு. இந்த இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரி பலமுறை டெஸ்லாவின் சிஇஓவான எலான் மஸ்க் கேட்டுக் கொண்டு அதனை மறுத்து வந்தது மத்திய அரசு. ஆனால், தற்போது இந்தியாவிலும் தங்களுடைய தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வருவதையடுத்து, மேற்கூறிய வகையில் இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி வரியையும் 15% ஆக குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த இறக்குமதி வரிக் குறைப்பை டெஸ்லா மட்டுமின்றி பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார் அதிகாரி ஒருவர்.
டெஸ்லாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்:
சீனாவில் உள்ள தங்களுடைய ஷாங்காய் தொழிற்சாலையில் இருந்து எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யத் திட்டமிட்டு வந்தது டெஸ்லா. ஆனால், சீனாவிலிருந்து கார்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மறுத்திருப்பதையடுத்து, தங்களுடைய ஜெர்மன் தொழிற்சாலையில் இருந்து புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய தற்போது திட்டமிட்டு வருகிறது டெஸ்லா. மேலும், 27,000 டாலர்கள் மதிப்பில் (இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம்) விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி, அதனை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறது டெஸ்லா. இந்தியாவின் இந்த இறக்குமதி வரிக் குறைப்பு திட்டத்தையடுத்து, இந்தியாவில் தங்களுடைய புதிய தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகளை டெஸ்லா துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.