'எக்ஸ்டர்' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. முன்பதிவும் தொடங்கியது!
இந்தியாவில் அடுத்து வெளியிடவிருக்கும் தங்களுடைய புதிய எக்ஸ்டர் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். என்னென்ன ட்ரிம்களில் வெளியாகவிருக்கிறது மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்திருக்கும் அந்நிறுவனம், இந்தக் காருக்கான முன்பதிவையும் தற்போது துவக்கியிருக்கிறது. எக்ஸ்டர் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது ஹூண்டாய். தென்கொரியா சாலைகளில் சோதனை செய்யப்பட்ட இந்தப் புதிய காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் சமீபத்தில் வலம் வந்தன. அந்த டிசைனில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி பாக்ஸி டைப் டிசைனோடு இருக்கிறது எக்ஸ்டர். ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தக் காரின் விலை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
ஹூண்டாயின் கிராண்டு i10 நியோஸ், ஆரா, i20 மற்றும் வென்யூ ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே எக்ஸ்டரிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த இன்ஜினோடு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவிருப்பதையும் உறுதிசெய்திருக்கிறது ஹூண்டாய். வெளியீட்டின் போது நியாஸ் மற்றும் ஆராவில் வழங்கப்படுவதைப் போல CNG கிட் ஒன்றையும் வழங்கவிருக்கிறது ஹூண்டாய். தொடக்க நிலை வேரியண்டான EX-ல் தொடங்கி, S, SX, SX(O) மற்றும் டாப்-எண்டான SX(O) Connect என ஐந்து வேரியண்ட்களாக வெளியாகவிருக்கிறது புதிய எக்ஸ்டர். டாடா பஞ்ச் மற்றும் சிட்ரன் C3 ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகவிருக்கிறது எக்ஸ்டர்.