இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடவும், தங்கள் கார் மற்றும் எஸ்யூவி பிளாட்ஃபார்ம்களை மேம்படுத்தவும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ரூ.20,000 கோடியை முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹூண்டாய். இதற்காக நடைபெற்ற நிகழ்வில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஇஓவான அன்சூ கிம் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பேசும் போது, இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் தளத்தை தமிழ்நாட்டில் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவன சிஇஓ அன்சூ கிம்.
ஹூண்டாயின் திட்டம் என்ன?
2028-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட ரூ.4,000 கோடியை முதலீடு செய்யவிருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளில் 100 எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஹூண்டாய். DC 150kW மற்றும் DC 60kW என இரண்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்புகள் கொண்டு 5 சார்ஜிங் மையங்கள், DC 150kW சார்ஜிங் அமைப்பு கொண்ட 10 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் மற்றும் DC 60kW சார்ஜிங் அமைப்பு கொண்ட 85 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் என 100 சார்ஜிங் மையங்களை அமைக்கவிருக்கிறது ஹூண்டாய். மேலும், தங்களுடைய ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் தயாரிப்பு அளவையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.