இந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் அப்டேட் செய்யப்பட்ட CD110 டிரீம் டீலக்ஸ்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய 'CD110 டிரீம் டீலக்ஸ்' கம்யூட்டர் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. புதிய அப்டேட்களுடன், முந்தைய மாடலை விட ரூ.2,000 கூடுதல் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய CD110. புதிய பைக்கில் DC முகப்பு விளக்குகள், சைடு ஸ்டாண்டு இன்ஜின் கட்-ஆஃப் வசதி, டூ வே இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், குரோம் மஃப்ளர் மற்றும் ஐந்து ஸ்போக் சில்வர் வீல் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. இரண்டு வீல்களிலும் 130மிமீ டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்துடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS) வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில், ஹீரோ பேஷன், டிவிஎஸ் ஸ்போர்ட் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது இந்த ஹோண்டா CD110.
ஹோண்டா CD110 டிரீம் டீலக்ஸ்: இன்ஜின் மற்றும் விலை
புதிய CD110-ல், 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட, 8.68hp பவர் மற்றும் 9.30Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 109.51சிசி ODB2 இன்ஜினை வழங்கியிருக்கிறது ஹோண்டா. மேலும், இந்த பைக்கில் தங்களுடைய Enhanced Smart Power மற்றும் Programmed Fuel Injection ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. பிளாக்/ரெட், பிளாக்/ப்ளூ, பிளாக்/கிரே மற்றும் பிளாக்/க்ரீன் என நான்கு நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த CD110 மாடலுக்கு 10 வருட வாரண்டி திட்டத்தை வழங்குகிறது ஹோண்ட. மூன்று வருடங்கள் ஸ்டாண்டர்டு வாரண்டியும், 7 வருடங்கள் ஆப்ஷனல் வாரண்டியும் வழங்குகிறது. இந்தியாவில் இதன் முந்தைய மாடலானது ரூ.71,133 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய பைக்கை, ரூ.73,400 விலையில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.