இந்தியாவில் வெளியானது ஹோண்டா டியோ 125 மாடல் ஸ்கூட்டர்
தங்களுடைய புதிய டியோ 125 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா. தற்போது இந்தியாவில், சிறிய 110சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா டியோவே விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது அதனை விட சற்று அதிக சிசி கொண்ட டியோவை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்த புதிய டியோவின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும், டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்ஜின் ஸ்டாப்/ஸ்டார்ட் சிஸ்டம், டிஜிட்டல் டேஷ்போர்டு, எல்இடி முகப்புவிளக்கு மற்றும் 18-லிட்டர் பூட்ஸ்பேஸ் ஆகிய வசதிகளைக் கொண்டு வெளியாகியிருக்கிறது டியோ 125. இந்தியாவில் சுஸூகி அவனிஸ் மற்றும் யமஹா ரே ZR ஆகிய 125சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது டியோ 125.
ஹோண்டா டியோ 125: இன்ஜின் மற்றும் விலை
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய பிற ஸ்கூட்டர் மாடல்களான கிரேசியா மற்றும் ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜினையே புதிய டியோ 125-யிலும் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த இன்ஜினானது, 8.3hp பவரையும், 10.4Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், 171மிமீ கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது புதிய டியோ 125. ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்மார்ட் என இரு வேரியன்ட்களாக இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது டியோ 125. இதில் ஸ்டாண்டர்டு வேரியன்டானது, ரூ.83,400 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஸ்மார்ட் வேரியன்ட்டானது, ரூ.91,300 எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.