இந்தியாவில் தங்களுடைய 160சிசி லைன்அப்பில் புதிய SP160 மாடலை வெளியிட்டிருக்கும் ஹோண்டா
தங்களுடைய 160சிசி லைன்அப்பில் மூன்றாவதாக புதிய மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஏற்கனவே எக்ஸ்பிளேடு மற்றும் யூனிகார்ன் ஆகிய கம்யூட்டர் பைக் மாடல்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் நிலையில், SP160 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். SP125 மாடலின் பெரிய வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த புதிய SP160. இந்த புதிய மாடலை யூனிகார்ன் மற்றும் எக்ஸ்பிளேடு ஆகிய மாடல்களுக்கு இடையே புதிய SP160 மாடலைப் பிளேஸ் செய்திருக்கிறது ஹோண்டா. எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்பக்க விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்டீருமெண்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளை புதிய SP160-யில் அளித்திருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா SP160: இன்ஜின் மற்றும் விலை
யூனிகார்ன் மற்றும் எக்ஸ்பிளேடு ஆகிய மாடல்களில் பயன்படுத்திய அதே இன்ஜினையே புதிய SP160-யிலும் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இதன் சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, 162சிசி இன்ஜினானது, 13.5hp பவரையும், 14.6Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. அதே இன்ஜின் தான் என்றாலும், மற்ற இரண்டு மாடல்களை விட கூடுதலான பவரைக் கொடுக்கும் வகையில் சற்று ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய SP160 மாடலை, இந்தியாவில் ரூ.1.17 லட்சம் முதல் 1.22 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. யமஹா FZ, சுஸூகி ஜிச்ஸர், பல்சர் P150 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக புதிய SP160 மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.