'CL300' மாடல் பைக்கின் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெறும் ஹோண்டா!
கடந்த ஆண்டு EIMCA நிகழ்வில் ட்வின்-சிலிண்டர் CL500 ஸ்கிராம்ப்லர் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் CL500-ன் குட்டி வெர்ஷனான CL300 பைக்கை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. அந்த CL300 பைக்கின் டிசைனுக்கு இந்தியாவில் தற்போது காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது ஹோண்டா. வெளிநாடுகளில் தாங்கள் வெளியிட்ட வாகனங்களின் டிசனை இந்தியாவில் ஹோண்டா காப்புரிமைக்கு பதிவு செய்வது இது முதல் முறை அல்ல. டிரான்ஸ்ஆல்ப் அட்வென்டர் பைக் மற்றும் ஃபோர்ஸா 350சிசி மேக்ஸி-ஸ்கூட்டர் ஆகிய மாடல்களுக்கும் இந்தியாவில் காப்புரிமை வாங்கியிருக்கிறது ஹோண்டா. ஆனால், ஸ்கிராம்ப்லர் மாடல் பைக்குகளுக்கு இந்தியாவில் தற்போது வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது காப்புரிமை பெற்றிருக்கும் CL300 மாடலை ஹோண்டா இந்தியாவில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இந்தியாவில் வெளியாகுமா CL300?
இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 286சிசி லிக்விட்-கூல்டு சிங்கள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட மற்றொரு பைக் மாடலான CB300R ஸ்ட்ரீட் நேக்கட் பைக்கை ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. ஆனால், CL300-ல் இருக்கும் இன்ஜினை விடி CB300R-ல் உள்ள இன்ஜின் 5hp பவரை கூடுதலாக உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும். CB300R-க்கான பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலமும், இங்கேயே அசெம்ப்ளி செய்வதன் மூலமும் ஓரளவு மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் ரூ.2.77 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. CL300-யும் அதே போல் இந்தியாவில் சில பாகங்களை உற்பத்தி செய்து அசெம்ப்ளி செய்தால் இந்தியாவில் CB300R-ஐ விட குறைவான விலையில் ஹோண்டாவால் விற்பனை செய்ய முடியும்.