இந்தியாவில் பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தவிருக்கிறதா ஹீரோ?
இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம், தங்களது வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பைக் விற்பனைப் பட்டியலில் இருந்து பேஷன் ப்ரோ மாடலினை நீக்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் அந்த பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கம்யூட்டர் பைக் பிரிவில் ஹீரோ விற்பனை செய்து வரும் பைக் மாடல்களில், ஸ்ப்ளென்டருக்கு அடுத்த படியாக, அதிகமாக விற்பனையாகி வரும் பைக்காக பேஷன் ப்ரோ இருந்து வருகிறது. பேஷன் லைன்அப்பில் இந்த அடிப்படை மாடல் மட்டுமில்லாமல், மேலும் இரு மாடல்களையும் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்து வந்தது.
பேஷன் ப்ரோ லைன்அப்:
9.02hp பவர் மற்றும் 9.89Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 113.2சிசி இன்ஜினைக் கொண்டிருந்தது பேஷன் ப்ரோ. மேலும், ட்ரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களுடன் இந்தியாவில் பேஷன் ப்ரோ விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஹீரோவின் பேஷன் லைன்அப்பில், பேஷன் ப்ளஸ் மற்றும் பேஷன் Xtec ஆகிய கூடுதல் வசதிகள் கொண்ட மாடல்களையும் அந்நிறுவனம் விற்பனை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், மேற்கூறிய மற்ற இரு மாடல்களை பைக் விற்பனை பட்டியலில் இருந்து அந்நிறுனம் நீக்கவில்லை. எனவே, பேஷன் ப்ளஸ் மற்றும் பேஷன் Xtec மாடல்களானது வழக்கம்போல இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பேஷன் Xtec மாடலானது எல்இடி முகப்புவிளக்குகள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எஸ்எம்எஸ் அலர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்டர் ஆகிய வசதிகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.