
இந்தியாவில் ப்ரீமியம் பைக் பிரிவில் கவனம் செலுத்தவிருக்கும் ஹீரோ
செய்தி முன்னோட்டம்
முன்னர் கம்யூட்டர் பைக் மார்க்கெட்டாக இருந்து வந்த இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், ப்ரீமியம் பைக்குகளின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மாறிவரும் வாடிக்கையாளர்கள் மனநிலையே இதற்குக் காரணம்.
வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு பல்வேறு பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகளை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தத் தொடங்கிவிட்டன.
அந்த வரிசையில் கரிஸ்மா XMR-ன் வெளியீட்டுடன் மீண்டும் இணைந்திருக்கிறது ஹீரோ. ப்ரீமியம் பைக் பிரிவில், எக்ஸ்ட்ரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் லைன்அப்பை மட்டுமே கொண்டிருந்த ஹீரோ, தற்போது கரிஸ்மாவையும் களமிறக்கியிருக்கிறது.
இத்துடன் நிறுத்திவிடும் எண்ணத்தில் ஹீரோ இல்லை என்பது தான் தற்போதைய தகவல். தொடர்ந்து ப்ரீமியம் பைக் பிரிவில் நான்கு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஹீரோ
ஹீரோவின் ப்ரீமியம் லைன் அப்:
கரிஸ்மாவைப் போல கோர் ப்ரீமியம் பிரிவில் இரண்டு பைக்குகளையும், X440யை அடிப்படையாகக் கொண்டு அப்பர் ப்ரீமியம் பிரிவில் இரண்டு பைக்குகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ.
தற்போது இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்டிருக்கிறது ஹீரோ. இவற்றில் 100 ஷோரூமை ப்ரீமியம் பைக்குகளுக்காக மட்டுமே தனித்துவமாக மாற்றவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ப்ரீமியம் பைக்குகளை முன்னிலைப்படுத்தும் தங்களுடைய இந்தப் புதிய திட்டத்திற்கு, நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடியை அந்நிறுவனம் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ப்ரீமியம் பைக்குகளுக்காக மட்டுமல்லாமல் EV-க்களுக்கும் செலவிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ.
இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் ப்ரீமியம் பைக் பிரிவில் ஹீரோவின் பங்கு வெறும் 3.7% மட்டும். கடந்த நிதியாண்டில் 69,000 ப்ரீமியம் பைக்குகளை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.