எக்ஸ்பல்ஸ் 400 பைக் மாடலை சோதனை செய்து வரும் ஹீரோ.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் சீரிஸில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய இரு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தற்போது அதே வரிசையில் எக்ஸ்பல்ஸ் 400 மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். சமீபத்தில் இந்திய சாலைகளில் இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் சோதனை செய்த போது, ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது இந்த எக்ஸ்பல்ஸ் 400 மாடல் பைக். பின்பக்கம் முழுவதும் பெரிய அளவுகளைக் கொண்டிருக்கிறது இந்த எக்ஸ்பல்ஸ் 400. முக்கியமாக அதன் பின்பக்க டயர்கள் மற்றும் எக்சாஸ்டை பெரிதாக வடிவமைத்திருக்கிறது ஹீரோ.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400: என்ன எதிர்பார்க்கலாம்?
350 சிசி முதல் 400 சிசிக்குள், சிங்கிள் சிலிண்டர் கொண்ட, லிக்விட் கூல்டு இன்ஜினை புதிய எக்ஸ்பல்ஸ் 400 மாடலில் ஹீரோ கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினானது 35hp பவர் மற்றும் 40Nm டார்க்கை உற்பத்தி செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை ஷாட்டில் சிக்கியதாகக் கூறப்படும் எக்ஸ்பல்ஸ் 400 மாடலின் முன்பக்கம் இன்வெர்டட் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த மாடலை அடுத்த ஆண்டு இறுதிக்கள் ஹீரோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஹீரோ கரிஸ்மா XMR மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 210சிசி இன்ஜினைக் கொண்ட எக்ஸ்பல்ஸ் 210 பைக் மாடலை அந்நிறுவனம் வெளியிடலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.