இந்தியாவில் புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை வெளியிட்டுள்ளது ஹீரோ
கடந்த மாதம் தான் தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 160 மாடலின் 4V வேரியன்டை வெளியிட்டது ஹீரோ. அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் நான்கு வால்வுகள் கொண்ட 4V வேரியன்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். தற்போது விற்பனையில் இருக்கும் இரண்டு வால்வுகள் கொண்ட 2V எக்ஸ்ட்ரீம் 200S-ஐ விட ரூ.6,000 கூடுதலான விலையில் வெளியாகியிருக்கிறது புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V. இன்ஜின் அப்கிரேடு மட்டுமல்லாமல், பல புதிய வசதிகளையும் இந்த வேரியன்டில் வழங்கியிருக்கிறது ஹீரோ. புதிய 200S-ன் முகப்பு விளக்கு, DRL மற்றும் டெய்ல்லைட் அனைத்தையும் LED-ஆகவே கொடுத்திருக்கிறது ஹீரோ. மூன் யெல்லோ, பேன்தர் ப்ளாக் மெட்டாலிக் மற்றும் ஸ்டெல்த் எடிஷன் ஆகிய மூன்று கலர் ஸ்கீம்களில் வெளியாகியிருக்கிறது புதிய எக்ஸ்ட்ரீம் 200S.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V: இன்ஜின் மற்றும் விலை
புதிய 200S-ல் 18.8hp பவர் மற்றும் 17.35Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய நான்கு வால்வுகள் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது முந்தைய இரண்டு வால்வுகள் கொண்ட இன்ஜினை விட 6% அதிகமான பவரையும், 5% அதிகமான டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், புதிய 200S 4V-யில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கால்/எஸ்எம்எஸ் அலர்ட் ஆகிய வசதிகளையும் அளித்திருக்கிறது ஹீரோ. இந்த 200S-ல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது. இந்த புதிய 4V வேரியன்டை ரூ.1.41 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ. சுஸூகி ஜிக்ஸர் SF மற்றும் யமஹா R15S ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V.