இணையத்தில் கசிந்த ஹீரோ கரிஸ்மா XMR-ன் பேட்டன்ட் டிசைன்
புதிய கரிஸ்மா XMR மாடலை ஹீரோ நிறுவனம் விரைவில் வெளியிடவிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பைக்கின் டிசைன் பேட்டன்ட் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது. புதிய கரிஸ்மாவை கடந்த பல மாதங்களாகவே இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது ஹீரோ. அப்படி சோதனை செய்யும் போதும் பலமுறை ஸ்பை ஷாட்களில் சிக்கியிருக்கிறது கரிஸ்மா. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டீலர்களுடனான பிரத்தியேக சந்திப்பில், புதிய கரிஸ்மா XMR-ஐ காட்சிப்டுத்தியிருந்தது ஹீரோ. அப்போது புதிய கரிஸ்மாவின் முன்பக்க டிசைனை மட்டுமே பார்க்க முடிந்தது. தற்போது கசிந்திருக்கும் கரிஸ்மாவின் பேட்டன்ட் டிசனைில், அந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாகங்கள் குறித்த மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஹீரோ கரிஸ்மா XMR:
210சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினைப் பெறவிருக்கும் புதிய ஹீகோ கரிஸ்மா XMR-ன் கிளிப்-ஆன் ஹேண்டில்பாரை கொஞ்சம் உயர்த்தி வைத்திருக்கிறது ஹீரோ. ஹீரோ, தங்களது விலை குறைவான எக்ட்ரீம் 160R-லேயே முன்பக்கம் USD ஃபோர்க் சஸ்பென்ஷனைக் கொடுத்திருந்த நிலையில், இந்த XMR-ல் சாதாரண முன்பக்க ஃபோர்க்கையே கொடுத்திருக்கிறது. அகலமான ப்யூல் டேங்க், சிறிய பின்பக்க இருக்கை, முன்பக்க வீலுக்கு பெட்டல் டிஸ்க் பிரேக்கைக் கொடுத்திருக்கிறது ஹீரோ. மேலும், பக்கவாட்டுக் கண்ணாடிகளை ஹேண்டில்பாரில் கொடுக்கமால், முன்பக்க ஃபேரிங்கில் கொடுத்திருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்தப் புதிய பைக் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரூ.1.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பஜாஜ் பல்சர் F250-க்குப் போட்டியாக களமிறங்கவிருக்கிறது கரிஸ்மா XMR.